பண்ணாரி அம்மன் கோவிலில் கம்பம் சாட்டு விழா; திரளான பக்தர்கள் தரிசனம்

பண்ணாரி அம்மன் கோவிலில் கம்பம் சாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-16 21:08 GMT
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலில் கம்பம் சாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 
பண்ணாரி அம்மன் கோவில்
சத்தியமங்கலம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 
இதைத்தொடர்ந்து அன்று இரவு கோவிலில் இருந்து பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் சப்பர வீதி உலா தொடங்கியது. பண்ணாரியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மனின் சப்பர வீதி உலா நடந்தது. பின்னர் அம்மனின் வீதி உலா நேற்று முன்தினம் இரவு மீண்டும் கோவிலை சென்றடைந்தது. கோவிலை சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். 
கம்பம் சாட்டும் நிகழ்ச்சி
இதைத்தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கைகளில் காப்பு கட்டி வந்து பண்ணாரி அம்மனை தரிசித்தனர். இதையொட்டி கோவிலின் ஒரு பகுதியில் வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த குச்சிகளை கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் ஆளுக்கு கொஞ்சமாக கையில் எடுத்துக்கொண்டு பண்ணாரி அம்மன் கோவிலை வலம் வந்தனர்.
அப்போது கோவில் முன்பு 5 அடி ஆழத்துக்கு 15 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த குழியில் பூசாரி மற்றும் பக்தர்கள் தாங்கள் கையில் கொண்டு வந்த வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகளை போட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கம்பம் சாட்டும் (குழி கம்பம்) நிகழ்ச்சி தொடங்கியது. இதில் குழியில் போடப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சியில் கற்பூரம் ஏற்றி நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. இதனால் குழி கம்பத்தில் போடப்பட்ட குச்சிகள் பற்றி எரிந்ததில் ஆள் உயரத்துக்கு தீ ஜூவாலை எழுந்தது. இதை கண்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அம்மா தாயே, பண்ணாரி தாயே’ என பக்தி கோஷங்களை எழுப்பினர். 
பீனாட்சி வாத்திய இசைக்கு...
இதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியம் இசைத்தனர். இந்த பீனாட்சி வாத்திய இசைக்கு ஏற்ப மலைவாழ் மக்கள் மற்றும் பக்தர்கள் குண்டத்தை சுற்றி நடனமாடி வந்தனர். 
குழி கம்பத்தில் வருகிற 20-ந் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்திய இசைக்கு ஏற்ப குண்டத்தை சுற்றி நடனமாடும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது. 

மேலும் செய்திகள்