2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

சேலத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர்- மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-03-16 21:01 GMT
சேலம்:-
சேலத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர்- மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
லாரி அதிபர்
நேற்று இரவு நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் அருகே சின்னவீராணம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 44). இவர், 4 லாரிகள் வைத்து மணல் வியாபாரம் செய்து வருகிறார். இதுதவிர லாரிகள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார்.
இவருடைய மனைவி குறிஞ்சி தமிழ் (29). இவர்களுக்கு விமல் பிரணவ் (7), கார்த்திக் பிரணவ் (4) ஆகிய மகன்கள் இருந்தனர்..
தூக்கில் தொங்கிய உடல்கள்
நேற்று மாலை ராஜேஷ் வீட்டை விட்டு வெளியே சென்று இருந்தார். இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. சத்தம் கொடுத்து பார்த்தார். வீட்டுக்குள் இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடைய செய்தது. 
அதாவது, வீட்டில் உள்ள மின்விசிறியில் மனைவி மற்றும் 2 மகன்கள் தூக்கில் பிணமாக தொங்கினர். இதுபற்றி வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தூக்கில் தொங்கிய குறிஞ்சி தமிழ் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகன்களை கொன்று தற்கொலை
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், 2 மகன்களையும் தூக்கில் தொங்கவிட்டு குறிஞ்சி தமிழ் தற்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், குறிஞ்சி தமிழுவுக்கும், ராஜேசுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு ஒரே வீட்டில் மேல்தளத்தில் ராஜேஷ் தன்னுடைய மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கீழ்தளத்தில் அவருடைய தாயார் முத்தம்மாள் வசித்து வந்தார்.
கணவரிடம் விசாரணை
இதற்கிடையே மாமியார்- மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாலையும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ராஜேஷ், மனைவி மற்றும் தாயை சமாதானப்படுத்தி விட்டு வெளியே புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து குறிஞ்சி தமிழ் இந்த பயங்கர முடிவை எடுத்து இருக்கலாம் கூறப்படுகிறது. இருந்தாலும் குடும்ப தகராறில் பெற்ற மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு குறிஞ்சி தமிழ் மனம் கல்லாகி இருக்குமா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் இதுதொடர்பாக ராஜேஷ் மற்றும் மாமியார் முத்தம்மாளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதற்காக இருவரையும் வீராணம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று இரவு சேலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்