மதுகுடிக்க பெற்றோர் பணம் தராததால் வீட்டுக்கு தீவைப்பு; கைது செய்ய வந்த போலீசாரை எரித்துக் கொல்ல முயற்சி - வாலிபர் அதிரடி கைது

கொப்பா அருகே பெற்றோர் குடிப்பதற்கு பணம் தராததால் வீட்டிக்கு தீவைத்ததுடன் கைது செய்ய வந்த 2 போலீஸ்காரர்கள் மீதும் தீவைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-16 20:35 GMT
சிக்கமகளூரு:

மது அருந்த பணம் தராததால்...

  சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜம்புகாடு கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 25). இவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவர், தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தேவராஜ் தனது பெற்றோரிடம் மது அருந்துவதற்கு பணம் தருமாறு
கேட்டுள்ளாார். ஆனால் அவரது பெற்றோர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் தனது பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.

வீட்டுக்கு தீவைத்தார்

  மேலும் ஆத்திரம் அடைந்த அவர், தனது பெற்றோரை வீட்டை விட்டு வெளியே விரட்டி குடிசை வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். இதனால் குடிசை வீடு தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் கொப்பா போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். 

அந்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

2 போலீஸ்காரர்கள் காயம்

  இதையடுத்து போலீஸ்காரர்களான ரகு, திருமூர்த்தி ஆகிய 2 பேர் தேவராஜை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் தன்னிடம் இருந்த பெட்ரோலை போலீஸ்காரர்கள் ரகு, திருமூர்த்தி மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் 2 போலீசாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் சக போலீசார் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இதற்கிடையே பொதுமக்கள், வாலிபரை மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீஸ் வசம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்