மீன்சுருட்டி அருகே மஞ்சுவிரட்டுக்கு தடை

மீன்சுருட்டி அருகே மஞ்சுவிரட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தாசில்தார் மீது தாக்குதல் நடத்திய 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-16 20:30 GMT
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சுத்துக்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவதோடு மஞ்சுவிரட்டு நடத்துவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா மற்றும் மஞ்சு விரட்டுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
 ஆனால், கோவில் திருவிழாவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்துவதற்காக கம்புகள் அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை அக்கிராம மக்கள் செய்திருந்தனர்.
தாசில்தார் மீது தாக்குதல்
 இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பு வேலிகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர். இதில், உடன்பாடு ஏற்படாததையடுத்து அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கம்பு வேலிகளை அகற்றினர்.
 இதனால், ஆத்திரமடைந்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் தாசில்தார் வாகனத்தை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாகனத்தின் உள்ளே இருந்த தாசில்தாரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, வாகனத்தின் கதவுகளை சேதப்படுத்தியும், அந்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்கியதோடு தாசில்தாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
40 பேர் மீது வழக்கு
  இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி காயம் அடைந்த தாசில்தாரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
இந்தசம்பவம் தொடர்பாக காட்டகரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் தாசில்தாரை தாக்கியதாக சிவராமன், பரசுராமன், ராமஜெயம், பாக்யராஜ், கமலக்கண்ணன், இளையராஜா, மனோகரன், முனியரசு, செந்தில்குமார், கலைக்குமார் உள்பட 40 பேர் மீது மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக சுத்துக்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீன்சுருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்