கோடிக்கணக்கான மக்களின் மனதில் புனித் ராஜ்குமார் வாழ்கிறார்; போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேச்சு
கோடிக்கணக்கான மக்கள் மனதில் புனித் ராஜ்குமார் வாழ்கிறார் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் புகழாரம் சூட்டி இருக்கிறார்.
பெங்களூரு:
தரமான ஹெல்மெட் விழிப்புணர்வு
பெங்களருருவில் தரமற்ற ஹெல்மெட் அணிவதால் விபத்து ஏற்படும் போது உயிர் இழப்பு ஏற்படுவதாகவும், அதனால் தரமானதுடன், முழுமையான ஹெல்மெட் அணியும்படி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் பாதியளவு ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டி சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிவதற்கான விழிப்புணர்வை போக்குவரத்து போலீசார் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, பெங்களூருவில் நேற்று தரமான ஹெல்மெட் அணியுங்கள், உயிரை பாதுகாத்து கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைடெபற்றது. இந்த நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அஸ்வினி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேசியதாவது:-
கோடிக்கணக்கான மக்கள்...
எனது வாழ்நாளில் எத்தனையோ பெரிய, பெரிய தலைவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களுடன் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆனால் புனித் ராஜ்குமார் கோடிக்கணக்கான மக்களின் அன்பு, மரியாதை பெற்றிருக்கிறார். கோடிக்கணக்கான மக்களின் மனதில் புனித் ராஜ்குமார் வாழ்கிறார். புனித் ராஜ்குமாருக்கு கிடைத்திருக்கும் இந்த அன்பை வேறு எந்த ஒரு நபரிடமும் நான் பார்த்ததில்லை.
புனித் ராஜ்குமார் நடிகராக மட்டும் இல்லாமல் சமூக நலப்பணிகளில் ஈடுபடுவதையும் தன்னை அர்ப்பணித்து கொண்டு இருந்தார். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் எப்போதும் கூறி வந்திருக்கிறார். தரமற்ற ஹெல்மெட் அணிவதால் விபத்தில் சிக்கும் போது உயிர் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்கும் விதமாக தான் தரமான ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணிய வேண்டும்
இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தரமான ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்வோரும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தரமான ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு வீடியோவும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் நடிகர் சிவராஜ்குமாரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். இந்த விழிப்புணர்வு வீடியோவை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும். விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க வேண்டும் என்பதே போலீசாரின் நோக்கமாகும். ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன், தரமான ஹெல்மெட் அணியும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் ரவிகாந்தே கவுடா கலந்து கொண்டார்.