வள்ளியூர் அருகே அகழாய்வு பணிகள்; சபாநாயகர், அமைச்சர் தொடங்கி வைத்தனர்

வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் அகழாய்வு பணிகளை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2022-03-16 19:49 GMT
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் அகழாய்வு பணிகளை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அகழாய்வு பணி
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்று படுகையில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இந்த பணி தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். தமிழக சபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு, அகழாய்வு பணியை தொடங்கி வைத்தனர். 

முக்கியத்துவம் வாய்ந்த இடம்
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் வரலாறு இதுவரை கங்கை நதிக்கரையில் இருந்து எழுதப்பட்டு கொண்டிருந்தது. இனி இந்தியாவின் எதிர்காலம் தமிழ்நாட்டின் தென்கோடியில் இருந்து எழுதப்படவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 
நெல்லை மாவட்டத்தில் சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியான துலுக்கர்பட்டியில் உள்ள விளாங்காடு என்று சொல்லக்கூடிய மேட்டுப்பகுதியில் நம்பியாற்றின் கரையில் அமைந்திருக்கக் கூடிய இந்த தொல்லியியல் மேட்டில் அகழாய்வு பணிகளை ெதாடங்கி இருக்கிறோம்.
துலுக்கர்பட்டி தொல்லியல் மேடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். இந்த இடத்தில் மனித நாகரிகம் நம்முடைய தமிழ் மொழியினுடைய நாகரிகம் இரும்புக் காலம் தொட்டு இங்கே நிலவியதற்கான சான்று இருக்கிறது. இங்கே ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலமாக இந்த பகுதியின் உடைய தொன்மை, மக்களுடைய நாகரிகத்தின் தொன்மையை காலக்கணிப்பை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

பொருநை அருங்காட்சியகம்
இந்த பகுதியில் கிடைக்ககூடிய முதுமக்கள் தாழிகள், குறியீடு இருக்கக்கூடிய பானை ஓடுகள் ஆகியவை இதனுடைய தொன்மையை ஏற்கனவே விளக்குவதாக இருந்தாலும் முறையான அகழாய்வுகளின் மூலமாக இங்கு இருக்கக்கூடிய தொன்மை பொருட்களை வெளிக்கொண்டு வரப்படுகிறது. அவற்றை உரிய வகையில் கனிம பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதன் மூலமாக துலுக்கர்பட்டி தொல்லியல் மேட்டில் நிறைய விஷயங்களை நாம் புரிந்துகொண்டு உலகத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும். அந்த வகையில் இந்த அகழாய்வு பணிகளை தொடங்கி, நடைபெறும். பொருநை அருங்காட்சியகத்திற்கான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கே பொருநை நதிக்கரை பகுதியில் பல இடங்களில் ஏற்கனவே அகழாய்வுகள் நடத்தி இருக்கிறோம். கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடல்சார் ஆராய்ச்சிக்காக கொற்கையை தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தொல்லியல்துறை இயக்குனர் சிவானந்தம், வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்