குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு செயல்திட்ட பயிலரங்கம்
நெல்லையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு செயல்திட்ட பயிலரங்கம் நடந்தது.;
நெல்லை:
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறை ஒழித்தல், மாநில செயல் திட்ட அமலாக்கம் குறித்த மண்டல அளவிலான பயிலரங்கம், நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் நடந்தது. மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மாநில செயல் திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து விளக்கி கூறினார். நாகர்கோவில் தொழிலாளர் துணை ஆணையர் முகமது அப்துல் காதர் சுபையர் வரவேற்று பேசினார். நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் ஹேமலதா வாழ்த்தி பேசினார். நெல்லை அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் வக்கீல்கள் சிறப்புரையாற்றினர்.
குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் சிறப்பம்சங்கள், குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்ட பின்னர் வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறை, இதர துறைகளின் பங்களிப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கி கூறினர்.
கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர்கள், மாவட்ட காவல்துறை, மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு துறை, மாவட்ட கல்வித்துறை, மாவட்ட சுகாதாரத்துறை, டி.எஸ்.எஸ்.எஸ். தொண்டு நிறுவன இயக்குனர், நெல்லை என்.சி.எல்.பி. வொக்கேஷனல் இன்ஸ்ட்ரக்டர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர் துறை மற்றும் பிற துறை சார்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.