அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

பல்வேறு புகார்களில் சிக்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update: 2022-03-16 19:22 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த எசாலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சவுந்தர்ராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு சரிவர வருவதில்லை, மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை, 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடனேயே வழங்க வேண்டிய எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்களை சரிவர வழங்காமல் இருத்தல், மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகையை பெற்றுத்தரவில்லை, பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்களை அரவணைத்து செல்வதில்லை என்றும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஒரே வகுப்பறையில் இடநெருக்கடியில் கல்வி கற்று வருகிற நிலையில் அப்பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்தை திறந்து மாணவர்களுக்காக பயன்படுத்தும்படி ஏற்கனவே உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரப்பெற்றும் அந்த உத்தரவை பின்பற்றாமல் இருத்தல் என பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் எசாலம் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தர்ராஜனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்