வாடிப்பட்டி
சமயநல்லூர் நான்கு வழி சாலையில் லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனி உள்ளது. இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூப்சிங் ராபிதாஜ் (வயது 29), தூத்துநாத்(33) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சமயநல்லூர்-மதுரை மெயின் ரோட்டில் ஊமச்சிகுளம் பஸ் நிறுத்தம் அருகில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ரூப்சிங் ராபிதாஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.