கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 23 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நரிப்பாளையம் பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் காதர் அலிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையிலான குழுவினரும், விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, ஏட்டுகள் குபேந்திரன், பாண்டியன் ஆகியோரும் நேற்று அதிகாலை 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை செம்பியன்மாதேவி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
20 டன் பறிமுதல்
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ எடை கொண்ட 400 சாக்கு மூட்டைகளில் 20 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த லாரி டிரைவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கல்லேரி பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ்குமார் (வயது 33) என்பதும், இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்ததோடு 20 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரை சேர்ந்த ரகோத்தமன், மணிகண்டன், வடவாம்பாக்கத்தை சேர்ந்த அல்லிமுத்து, ஆனந்தராஜ், ரமேஷ் ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் விக்கிரவாண்டி தாலுகா அரும்புலி பகுதியில் விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், ஏட்டுகள் சுந்தரபாண்டியன், சிவக்குமார் ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் வடகரைநம்பியந்தலை சேர்ந்த அஜித் (26), விக்னேஷ் (21) என்பதும், இவர்கள் இருவரும் அரும்புலி பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கர்நாடகாவுக்கு கடத்திச்செல்வதற்காக அரும்புலி மாரியம்மன் கோவில் அருகில் மொத்தமாக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததோடு அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் கிலோ (3டன்) ரேஷன் அரிசியையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.