450 கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டுப்புற கலைவிழா
தஞ்சை தென்னகபண்பாட்டு மையத்தில் 450 நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெரும் கலை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி 40 அரங்குகளில் கைவினைப்பொருட்கள் கண்காட்சியும் நடக்கிறது.
தஞ்சாவூர்:-
தஞ்சை தென்னகபண்பாட்டு மையத்தில் 450 நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெரும் கலை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி 40 அரங்குகளில் கைவினைப்பொருட்கள் கண்காட்சியும் நடக்கிறது.
நாட்டுப்புற கலைவிழா
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்கிற வடகிழக்கு மாநில கலைவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 15-ந்தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த கலைவிழாவை தொடர்ந்து தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடனங்களின் கலைவிழா நேற்று மாலை தொடங்கியது. இந்த கலைவிழா வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்களும் 11 குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
450 கலைஞர்கள் பங்கேற்பு
இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்முகாஷ்மீர், அரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலுங்கானா, ஒடிசா, மத்தியபிரதேசம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 30 குழுக்களை சேர்ந்த 450 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற கரகாட்டம் மற்றும் காவடியாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ராஜஸ்தானின் ஜாக்ரி நடனமும், மராட்டியத்தின் லாவணியாட்டமும், கர்நாடகாவின் மகிளாவீரகாசி நடனமும் நடைபெற்றது. ஜம்முகாஷ்மீரின் சுர்மா நடனமும், மத்திய பிரதேசத்தின் பதாய் நடனமும், ஹரியானாவின் பாக் நடனமும், குஜராத்தின் டங்கி நடனமும், கேரளாவின் சிங்காரி மேளமும், ஆந்திரபிரதேசத்தின் வீரநாட்டியமும், பஞ்சாபின் பங்காரா நடனமும் நடைபெற்றது.
10 அரங்கங்களில் கண்காட்சி
தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த கலை விழா நடக்கிறது. இந்த கலைவிழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். மேலும் இந்த கலைவிழாவையொட்டி 40 அரங்குகளில் கைவினைப்பொருட்கள் கண்காட்சியும் நடைபெறுகிறது.
இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் 10 அரங்குகளில் உணவுத்திருவிழாவும் நடைபெறுகிறது. கண்காட்சி, உணவு அரங்கம் நாள்தோறும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது. இவ்விழாவுக்கு அனுமதி இலவசம் என்பதால், அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொள்ளலாம் என தெற்கு மத்திய பண்பாட்டு மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.