கத்தியால் மாணவி கையை வெட்டி 2 பவுன் நகை பறிப்பு;மேலும் 2 பெண்களிடம் 16 பவுன் நகை கைவரிசை

குமரியில் கத்தியால் மாணவி கையை வெட்டி 2 பவுன் நகை பறிக்கப்பட்டது. மேலும் 2 பெண்களிடம் 16 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-03-16 18:51 GMT
திங்கள்சந்தை, 
குமரியில் கத்தியால் மாணவி கையை வெட்டி 2 பவுன் நகை பறிக்கப்பட்டது. மேலும் 2 பெண்களிடம் 16 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
மாணவி 
திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ண பிரசாத் (வயது 47). இவர் தற்போது செட்டியார்மடம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகள் கல்லுக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் மாலை மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர், மாணவியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.
கையை வெட்டி நகை பறிப்பு
ஆனால் மாணவி நகையை பறிக்க விடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த நபர் திடீரென கத்தியை எடுத்து மாணவியின் கையை லேசாக வெட்டியதாக கூறப்படுகிறது.
பிறகு மர்மநபர் கத்திமுனையில் மாணவியை மிரட்டி 1½ பவுன் நகை, காதில் கிடந்த ½ பவுன் கம்மல் ஆகியவற்றை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை கோபால கிருஷ்ணபிரசாத் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதேபோல் மேலும் 2 பெண்ணிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஓய்வு பெற்ற பேராசிரியை
நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மரிய செல்வி (வயது 72), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் தினமும் அதிகாலை 5.30 மணி அளவில் அருகே உள்ள ஆலயத்தில் பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம். அதே போல நேற்றும் மரிய செல்வி ஆலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.
மாிய செல்வியின் அருகே வந்ததும் திடீரென அவரை மர்ம நபர்கள் காலால் மிதித்து கீழே தள்ளியுள்ளனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மர்ம நபர் வேகமாக வந்து மரிய செல்வி கழுத்தில் கிடந்த 6¼ பவுன் நகையை பறித்தார். இதை சற்றும் எதிர்பாராத மரிய செல்வி  திருடன், திருடன் என கூச்சலிட்டார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இந்த துணிகர சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நகை பறிப்பு நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில், இந்த காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
கணவன்-மனைவி
மண்டைக்காடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு ஷோபா(வயது 33) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
 சதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
10 பவுன் நகை...
சம்பவத்தன்று சதீஷ் குடும்பத்துடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மீண்டும் பஸ்சில் ஏறி பருத்திவிளை பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். பின்னர், வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். 
அப்போது, அங்கு மறைவான பகுதியில் பதுங்கி இருந்த மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து ேஷாபாவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஷோபா திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். 
பின்னர் இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசில் ஷோபா புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்