தமிழை கொண்டாடுபவர்கள், கம்பனையும் கொண்டாட வேண்டும்

தமிழை கொண்டாடுபவர்கள், கம்பனையும் கொண்டாட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Update: 2022-03-16 18:39 GMT
காரைக்குடி, 
“தமிழை கொண்டாடுபவர்கள், கம்பனையும் கொண்டாட வேண்டும்” என காைரக்குடி விழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். 
கொண்டாட வேண்டும் 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் கல்லுக்கட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் கம்பன் விழா நடைபெற்றது. 4 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் தொடக்க விழாவிற்கு கோவிலூர் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி தலைமை தாங்கினார். கம்பன் அடிப்பொடி பழனியப்பன் வரவேற்றார். 
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சிங்கப்பூர் வரதராஜன் எழுதிய ‘கம்பனின் பரதன் கண்டவன் வரதன்’ என்ற நூலை வெளியிட்டு பேசினார். 
தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரத்திற்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- 
தமிழை கொண்டாடுபவர்கள் எல்லாம் கம்பனை கொண்டாட வேண்டும். ஏன் கொண்டாடவில்லை? ராமனை போற்றியதாலோ என்னவோ அவர்கள் கம்பனை கொண்டாட மறந்தனர் போலும்..
ராமனை காட்டுக்கு போகச்சொன்ன போதிலும், நாட்டை ஆளச் சொன்னபோதிலும் ராமன் முகம் மலர்ந்த தாமரை போல் இருந்ததாக கம்பர் கூறுவார். அதனாலேயே எனக்கு கம்பரை பிடிக்கும்.  காரைக்குடியில் கம்பர் கோட்டம் அமைக்க இருப்பதையும், அதற்கு ஆதீன திருமடமே உதவி செய்ய இருப்பதையும் எண்ணி மகிழ்கிறேன். கம்பனின் கருத்துக்கள் நமது வாழ்வியலை உயர்த்தும். கம்பனை போற்றவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய கல்வி கொள்கை 
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- 
புதுச்சேரியில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக யாருக்கும் ெதாற்று இல்லை. கடுமையான நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இதனை சாதித்தோம். தற்போது 12 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முறையை தொடர்ந்து வருகிறோம். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். புதிய கல்விக்கொள்கை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையை முற்றிலுமாக ஆராய்ந்து அனைத்து மாநிலங்களும் அதனை பின்பற்ற வேண்டும். அது தாய் மொழி கல்வியை ஊக்கப்படுத்துகிறது. உலக அரங்கில் இந்திய மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வர புதிய கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 
முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை, மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். முன்னதாக பிள்ளையார்பட்டியிலும், நிகழ்ச்சிக்கு பின் காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில், அரியக்குடி பெருமாள் கோவில்களில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்