ஆற்றூரில் வங்கி ஏ.டி.எம்.மில் தீ விபத்து
ஆற்றூரில் வங்கி ஏ.டி.எம்.மில் தீ விபத்து நடந்தது.
திருவட்டார்,
ஆற்றூரில் வங்கி ஏ.டி.எம்.மில் தீ விபத்து நடந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஏ.டி.எம்.மில் தீ விபத்து
திருவட்டார் அருகே ஆற்றூர் ஜங்ஷனில் உள்ள தனியார் கட்டிடத்தின் முதல் தளத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை இயங்குகிறது. வங்கியின் முன்புறம் உள்ள அறையில் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன.
நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். அறையில் புகை வருவதைப்பார்த்து, வங்கிப்பணியாளரிடம் கூறினார். அவர் வந்து பார்த்த போது ஏ.சி. எந்திரத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே வங்கியில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.
கரும்புகை
ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் எரிந்ததால், கரும்புகை ஆற்றூர் ஜங்ஷனை சூழ்ந்தது. இதுபற்றி குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஏ.சி. எந்திரத்துக்குச்செல்லும் மின் இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஏ.டி.எம். எந்திர அறையில் உள்ள முதற்கட்ட பழுதுகள் சரிசெய்யப்பட்டது. ஒரு ஏ.சி. எந்திரம் முழுமையாகவும், இன்னொரு ஏ.சி. எந்திரம் பாதி அளவும் எரிந்திருந்தது. ஏ.டி.எம். எந்திரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.