கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் குமரியில் திடீர் மழை
கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று திடீரென மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 2 தென்னை மரங்கள் தீப்பற்றி நாசமானது.
நாகர்கோவில்,
கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று திடீரென மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 2 தென்னை மரங்கள் தீப்பற்றி நாசமானது.
திடீர் மழை
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டினர். அதோடு இரவிலும் வெப்பத்தின் தாக்கம் எதிரொலித்ததால் மக்கள் தூக்கமின்றியும் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், சாமிதோப்பு, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. மேலும் இடி, மின்னலுடன் மழை நீடித்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வை சண்முகம் சாலை, செம்மாங்குடி ரோடு மற்றும் கோர்ட்டு ரோடு உள்ளிட்ட இடங்களில் அதிகளவு தண்ணீர் சென்றது.
மின்னல் தாக்கியது
பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் ஒரு தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தீயை தீயணைப்பு வீரர்கள் முழுமையாக அணைத்தனர். இதே போல இறச்சகுளம் பகுதியிலும் ஒரு தென்னை மரம் தீப்பிடித்து நாசமானது.
மேலும் கணேசபுரத்தில் உள்ள ஒரு குடியிருப்பை மின்னல் தாக்கியதில் குடியிருப்பின் ஒரு சுவர் சேதமடைந்தது. அதே சமயத்தில் அங்கு மின்தடையும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.