தர்மபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி நெசவாளர் நகரில் மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
தர்மபுரி:
தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜை, காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமும், சிறப்பு யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் சாமி மற்றும் அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சியும், வேத பாராயண வழிபாடுகளும் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் கே.பி.கே.செல்வராஜ் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.