இண்டூர் அருகே குடும்பத்தகராறில் மனைவி வெட்டிக்கொலை ஆடு மேய்க்கும் தொழிலாளி கைது
இண்டூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்த ஆடு மேய்க்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்த ஆடு மேய்க்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆடு மேய்க்கும் தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கழனிகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (52). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் கணவன்-மனைவி 2 பேர் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் காந்தி கடந்த 6 மாதமாக வீட்டை விட்டு வெளியேறி ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு வராமல் அங்கேயே சாப்பிட்டு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த காந்தி, மனைவி மாதம்மாளிடம் தகராறு செய்துள்ளார்.
வெட்டிக்கொலை
அப்போது திடீரென காந்தி தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டு மாதம்மாள் அங்கேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதுகுறித்து இண்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதம்மாள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்தியை கைது செய்தனர். குடும்ப தகராறில் மனைவியை, கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.