பாப்பாரப்பட்டி அருகே கறிக்கடைக்காரர் குத்திக்கொலை தம்பி மகன் வெறிச்செயல்

பாப்பாரப்பட்டி அருகே கறிக்கடைக்காரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தம்பி மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-03-16 18:21 GMT
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே கறிக்கடைக்காரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தம்பி மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கறிக்கடைக்காரர்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 62). இவர் சிட்லகாரம்பட்டியில் கறிக்கடை வைத்து இருந்தார். இவரது தம்பி செல்வம் (55). இவரது மகன் ரஞ்சித்(22) இவர், முனுசாமி கறிக்கடைக்கு அருகில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். செல்வம் தனது பேக்கரி கடையின் மாடிக்கு படிக்கட்டு கட்டும் பணி செய்து வந்தார். 
இதனால் அருகில் உள்ள தனது கறிக்கடையில் செங்கல்கள் மற்றும் மண் ஆகியவை விழுகிறது. இதை தடுக்க தடுப்பு அமைக்குமாறு நேற்று முன்தினம் செல்வத்திடம், முனுசாமி கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த செல்வத்தின் மகன் ரஞ்சித், முனுசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.
குத்திக்கொலை
இந்தநிலையில் இரவு ரஞ்சித் மீண்டும் முனுசாமி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது முனுசாமியை ரஞ்சித் இரும்பு கம்பியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முனுசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
தனது கண் முன்னால் தந்தையை குத்திக்கொலை செய்ததை பார்த்த முனுசாமியின் மகன் முருகேசன் (32) அரிவாளால் ரஞ்சித்தை வெட்டினார்.  இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் மற்றும் முருகேசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்