காவேட்டிப்பட்டி அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு-திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளுக்கு பாராட்டு
காவேட்டிப்பட்டி அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் ராமன் நேற்று ஆய்வு செய்தார். காவேட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பு வாரியாக மாணவ-மாணவிகளின் வாசிப்புத்திறனை ஆய்வு செய்தார். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் முதலாம் வகுப்பு மாணவி வான்மதி, 70 திருக்குறள்களை ஒப்புவித்து காட்டி அசத்தினார். இவரது அக்காள் அனன்யா இதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 1,330 திருக்குறளையும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று ஒப்புவித்து, முதல் பரிசினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவிகள் வான்மதி, அனன்யா ஆகிய இருவரையும் மாவட்ட கல்வி அலுவலர் ராமன், பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசினை வழங்கி பாராட்டினார். ஆய்வின் போது பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, பள்ளி தலைமை ஆசிரியை கயல்விழி மற்றும் ஆசிரியைகள் உடன் இருந்தனர்.