நாமக்கல் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்-50,700 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
நாமக்கல் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. மொத்தம் 50,700 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.;
நாமக்கல்:
கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 64 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 33 ஆயிரத்து 950 பேருக்கும், 2-ம் தவணை தடுப்புசி 9 லட்சத்து 16 ஆயிரத்து 745 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கோர்பேவேக்ஸ் என்ற புதிய வகை தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நேற்று தொடங்கப்பட்டது.
50,700 சிறுவர், சிறுமிகள்
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரத்து 700 சிறுவர், சிறுமிகளுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நேற்று நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முதல் கட்டமாக தொடங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பள்ளியாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.