நாமக்கல் அருகே ரேஷன் கடையில் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா?-கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு

நாமக்கல் அருகே உள்ள கருங்கல்புதூர் ரேஷன் கடையில் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா? என கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-16 18:18 GMT
நாமக்கல்:
கலெக்டர் ஆய்வு
செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, விவரங்களை சரிபார்த்தார். 
பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்ட பல்வேறு சான்றிதழ்கள், குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை கணினியில் பார்வையிட்டார். விண்ணப்பம் பெறப்பட்ட நாள் மற்றும் சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு வருவாய் ஆய்வாளர் பரிந்துரை செய்த நாள் விவரம் ஆகியவற்றை சரிபார்த்தார். மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்காக சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும்போது, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
உணவு பொருட்களின் தரம்
இதனை தொடர்ந்து, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கரையான்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் சமையல் கூடம் ஆகியவற்றினை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அங்கன்வாடி மைய முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்தும், உணவுப்பொருட்களின் இருப்பு, தரம் குறித்தும் கலெக்டர் சத்துணவு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நாமக்கல் அருகே கருங்கல்புதூர் ரேஷன் கடையினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது விற்பனையான பொருட்களின் தொகை விவரங்களை விற்பனை கருவியை இயக்கி அதன் அடிப்படையில் உணவு பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டார். மேலும் ரேஷன் கடையில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் தரமாக உள்ளதா? என கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் மோகன்ராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்