தாயிடம் தகராறு செய்ததை தட்டி கேட்ட பெயிண்டருக்கு கத்திக்குத்து; தந்தை கைது

தாயிடம் தகராறு செய்ததை தட்டி கேட்ட பெயிண்டரை, கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-16 18:18 GMT
சேந்தமங்கலம்:
மதுபோதையில் தகராறு
சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 53). மிளகு வியாபாரி. இவருடைய மனைவி காமாட்சி (47). இந்த தம்பதியின் மகன் ஜீவானந்தம் (21). பெயிண்டர். ராஜ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் அவர் மதுபோதையில் அடிக்கடி தனது மனைவி காமாட்சியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மதுபோதையில் ராஜ்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது காமாட்சியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. 
மகனுக்கு கத்திக்குத்து
இதனை வீட்டில் இருந்த மகன் ஜீவானந்தம் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஜீவானந்தத்தை குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஜீவானந்தத்தை மீட்டு, சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
இந்த சம்பவம் குறித்து காமாட்சி பேளுக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து மகனை கத்தியால் குத்திய ராஜ்குமாரை கைது செய்தார். தாயிடம் தகராறு செய்ததை தட்டி கேட்ட மகனை, மிளகு வியாபாரி கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்