தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய கண்ணாடி காலனியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் சூரியமூர்த்தி (வயது 25). டிப்ளமோ படித்துள்ள இவர் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த 17.3.2020 அன்று சூரியமூர்த்தி, அந்த சிறுமியை திருச்சிக்கு கடத்தி சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கடலூருக்கு திரும்பி வந்தபோது குறிஞ்சிப்பாடி அருகே தம்பிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கியுள்ளார். அங்கு அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
போக்சோவில் கைது
இதையடுத்து வீட்டுக்கு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவத்தை பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூரியமூர்த்தியை கைது செய்தார்.
மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
7 ஆண்டு சிறை
அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சூரிய மூர்த்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்பு துறையின் சமூகநல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.