நாகநாதசுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை தொடக்கம்

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் ராகுபெயர்ச்சி விழா லட்சார்ச்சனை தொடங்கியது.

Update: 2022-03-16 18:30 GMT
திருவிடைமருதூர்:-

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் ராகுபெயர்ச்சி விழா லட்சார்ச்சனை தொடங்கியது. 

நாகநாதசுவாமி கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு தலம் எனப்போற்றப்படும் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். ராகுபகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது ராகு பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ராகு பெயர்ச்சி தீபாராதனை

இதையொட்டி வருகிற 19-ந் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் ராகு பெயர்ச்சி விழா தொடங்குகிறது. தொடர்ந்து 20-ந் தேதி 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் 21-ந் தேதி காலை 10.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. 
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை லட்சார்ச்சனை நடக்கிறது. பின்னர் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. 

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்