ரூ.10 ேகாடியில் பெரிய கண்மாயை சீரமைக்கும் பணி

ரூ.10 ேகாடியில் பெரிய கண்மாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-16 17:50 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீரை வீணாகாமல் விரைவாக கொண்டு செல்ல ரூ.9 கோடியே 93 லட்சம் மதிப்பில் மதகு, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
பெரிய கண்மாய் 
ராமநாதபுரம் நகரை சுற்றிய பகுதிகளின் விவசாய தேவையையும், தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்யும் ஒரே நீர் ஆதாரம் பெரிய கண்மாய் ஆகும். பருவமழை நன்றாக பெய்யும் சமயங்களிலும், வைகை தண்ணீர் கடைசிவரை வந்து சேரும் தருணங்களிலும்தான் இந்த பெரிய கண்மாய் நிறைந்து விவசாயம் செழித்து வருகிறது. பெரும்பாலான காலங்களில் இந்த கண்மாயில் தண்ணீர் தேக்க வழியில்லை, பாதுகாப்பில்லை என்ற காரணங்களை கூறி தண்ணீர் அனைத்தையும் கடலில் கலந்துவிட செய்வதுதான் இதுநாள் வரை நிலவி வருகிறது. 
இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்த நிலையில் பெரிய கண்மாய் வேகமாக நிரம்பியது. அந்த சமயத்தில் வைகை அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டு கொஞ்சம்கூட சேமிக்க முடியாமல் தண்ணீர் கடலில் கலந்து வீணாகியது. 
நிதி ஒதுக்கீடு 
இதன் காரணமாக பெரிய கண்மாயில் தண்ணீர் தேக்கி வைப்பது, கரையை பலப்படுத்துவது, வரத்து கால்வாய்களை சீரமைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் எழுந்தது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பயனாக தற்போது பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரும் பகுதியை சீரமைத்து சரிசெய்ய ரூ.9 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அதன்படி இந்த நிதியின் மூலம் பொதுப்பணித் துறையின் சார்பில் பெரிய கண்மாய் தலைமதகு பகுதியில் பெரியகண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் 7 மதகு கதவுகளை விட தற்போது கூடுதலாக 2 கதவுகள் மதகுகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் இதுநாள் வரை பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் 1, 850 கனஅடி கொண்டு சென்ற நிலையில் இனிவரும் காலங்களில் கூடுதலா 550 கனஅடி தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன்படி பார்த்தால் வைகை தண்ணீரால் 7 நாட்களில் பெரிய கண்மாய் நிரம்பி வந்த நிலையில் இனி 4 முதல் 5 நாட்களில் கொள்ளளவை எட்டிவிடும். 
தீவிரம் 
இதுதவிர, காருகுடி ரோடு பாலம் முதல் தலைமதகு வரை வைகை ஆற்று கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் கரைகளை பலப்படுத்தும் பணியுடன் ஆற்றுப்பகுதி மேடு, பள்ளங்களை சரிசெய்யும் வகையில் தரை சமப்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் 2 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு கட்ட பணிகளினால் தண்ணீர் தங்கு தடையின்றி சீராக பெரியகண்மாயை சென்றடையும். இந்த பணிகள் அனைத்தையும் வரும் பருவமழை காலத்திற்கு முன்பாக முடிக்க பொதுப்பணித்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்