புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-16 17:46 GMT
புதுக்கோட்டை:
12 முதல் 14 வயது வரை
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். முகாமை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து ேபசுகையில், 
கொரோனா தொற்றை தடுப்பதற்கு பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இப்பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
2 தவணைகள்
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில், சுமார் 72 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் 17.3.2008 முதல் 15.3.2010 வரை உட்பட்ட தேதிகளில் பிறந்த அனைத்து சிறுவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசிகள் 2 தவணைகளாக குறைந்தபட்சம் 4 வாரங்களுக்குட்பட்ட இடைவெளியில் வழங்கப்படவுள்ளது. எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்களது தகுதியான வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தி கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.முகாம்களில் துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணிகள்) டாக்டர்.அர்ஜுன்குமார் (புதுக்கோட்டை), டாக்டர்.கலைவாணி (அறந்தாங்கி), புதுக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திலகவதி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடகாடு
வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் பள்ளி கல்வி துறை சார்பாக 12 முதல் 14 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட  கலெக்டர் கவிதாராமு ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி வரவேற்றார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, அறந்தாங்கி சுகாதார பணி துணை இயக்குனர் கலைவாணி, வட்டார மருத்துவர் ராமசந்தர், வடகாடு ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்