மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள்

கடலூரில் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 122 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

Update: 2022-03-16 17:38 GMT
கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கால்பந்து, கபடி மற்றும் வாலிபால் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆண்கள், பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கபடி போட்டியில் 31 ஆண்கள் அணியும், 9 பெண்கள் அணி என 40 அணிகளும், கால்பந்து போட்டியில் 27 ஆண்கள்அணியும், 6 பெண்கள் அணி என 33 அணிகளும், வாலிபால் போட்டியில் 34 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணி என 49 அணிகள் என மொத்தம் 122 அணிகள் கலந்து கொண்டன.

பரிசளிப்பு விழா

இதில் வெற்றி அணிகள் தேர்வு செய்யப்பட்டன. முன்னதாக போட்டிகளை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் பெரிய        கருப்பன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.500, 2-ம் பரிசாக தலா ரூ.350, 3-வது பரிசாக தலா ரூ.250 -க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

 மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். விழாவில் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்துச்செல்லப்படுவார்கள். மேலும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு இலவசமாக விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும் என்று விளையாட்டு அலுவலர் தெரிவித்தார். முடிவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய குத்துச்சண்டை பயிற்றுனர் சிவராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்