நிலம் கையகப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்
மந்தாரக்குப்பம் அருகே என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிைய கிராம மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மந்தாரக்குப்பம்,
கம்மாபுரம் ஒன்றியம் வடக்குவெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட தொல்காப்பியர் நகர், பாரதி நகர், அருந்ததியர் தெரு ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை சுரங்க விரிவாக்கப்பணிக்காக கையகப்படுத்தப்போவதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதையடுத்து இங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
கிராம மக்கள் தடுத்தனர்
இந்த நிலையில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்காக நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் என்.எல்.சி. அதிகாரிகள் வடக்குவெள்ளுர் ஊராட்சிக்கு சென்றனர். கிராமத்தின் நுழைவு பகுதியில் வந்த அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அந்த பகுதியை சேர்ந்த மக்களும் தடுத்து நிறுத்தினர். மாற்று இடம் வழங்கிய பின்னரே நிலம் கையகப்படுத்த எங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார், தாசில்தார் தனபதி ஆகியோர் அங்கு விரைந்து வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் 157 குடும்பங்களில் 6 குடும்பத்தினர் என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து நிலத்துக்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுள்ளனர். மீதமுள்ள 151 குடும்பங்களில் என்.எல்.சி.யில் நிரந்தரமாக பணிபுரியும் தொழிலாளர்களை தவிர்த்து மீதமுள்ள நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு என்.எல்.சி. நிறுவனம் தரும் இழப்பீடு தொகையை தாலுகா அலுவலக கருவூல கணக்குக்கு மாற்றம் செய்ய வேண்டும். மேலும் அதன் மூலம் எங்கள் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் 3½ ஏக்கர் நிலத்தை வாங்கி சராசரியாக பிரித்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அப்பகுதி மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் கிராமத்துக்குள் சென்ற அதிகாரிகள் வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வருகிறார்கள்.