தி.மு.க. கவுன்சிலர்களின் மோதலால் பாதியிலேயே முடிந்த முதல் கூட்டம்
சின்னாளப்பட்டி பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் முதல் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
சின்னாளப்பட்டி:
பேரூராட்சி முதல் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதற்கு தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்களிடம், பேரூராட்சி பணியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
இதனை தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அதில் பேரூராட்சி தலைவர் அறை புதுப்பித்தல் பணி குறித்து மன்றத்தில் ஒப்புதல் கேட்கப்பட்டது.
கவுன்சிலர் ஜெயகிருஷ்ணன் (சுயே):- தலைவர் அறையை புதுப்பிக்கும் போது கவுன்சிலர்களிடம் கேட்காமல் புதுப்பித்துவிட்டு தற்போது அதற்கு ஒப்புதல் கோருவது சரியில்லை. மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை முறையாக செலவு செய்ய வேண்டும்.
கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கவுன்சிலர் தாமரைசெல்வி (தி.மு.க.):- சின்னாளப்பட்டி பேரூராட்சியில் செலவு செய்யும் நிதியில் வெளிப்படை தன்மை இல்லை. எந்த பணி செய்வதாக இருந்தாலும், மன்றத்தின் ஒப்புதல் பெற்று முறையாக ஒப்பந்தம் கோரி வெளிப்படை தன்மையோடு பணிகளை செய்ய வேண்டும்.
கவுன்சிலர் ராஜூ(தி.மு.க.):- தலைவர் அறை புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டதற்கு பதில் அளித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மற்ற கவுன்சிலர்கள் எழுந்து நின்று, அறை புதுப்பித்தல் பணிக்கு தலைவர், துணைத்தலைவர், செயல்அலுவலர் பதில் கூறாமல் கவுன்சிலர் கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்துடன் ேமாதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பாதியிலேயே முடிந்த கூட்டம்
இதை பார்த்த தலைவர், கூட்டத்தை பாதியிலேயே முடிந்ததாக அறிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார். உடனே துணைத்தலைவரும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார்.
கூட்டத்துக்கு வந்திருந்த பெண் கவுன்சிலர்கள் 10 பேர் தங்கள் வார்டுகள் பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூட்ட அரங்கிலே காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களும் புறப்பட்டு சென்றனர்.
சுமார் 3 மணி நேரம் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் மோதலுடன் முடிந்தது.