கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; 3 பேர் கைது
கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டியல் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:-
கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டியல் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி பகுதியில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த புகார்களை தொடர்ந்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்திவாசன், ராஜா மற்றும் போலீசார் சுரேஷ், பார்த்திபன், பாலசுப்பிரமணியன், நாடிமுத்து, ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு உடையூர் பகுதியை சேர்ந்த சிவாஜி மகன் சந்தோஷ் (வயது19), திருப்பங்கூர் நரிமுடுக்கு பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் மணிகண்டன் (21), அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் ராகுல் (20) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக அரசு ஆஸ்பத்திரி பகுதியில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.