நாகையில் சுட்டெரிக்கும் வெயில்
நாகையில் கடந்த 3 நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள
நாகப்பட்டினம்;
நாகையில் கடந்த 3 நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயில்
நாகை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடிக்கிறது.
இதனால் மின்விசிறி இல்லாமல் வீட்டில் தூங்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்கினி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மக்கள் வெயிலிலிருந்து தங்களை தற்காத்துகொள்ள இளநீர், தர்பூசணி, சர்பத், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்கி பருகி வருகின்றனர். இதனால் இளநீர், தர்பூசணி விற்பனை மும்முரமடைந்து உள்ளது.
பொதுமக்கள் அவதி
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதியில் இருந்து நேற்று வரை 3 நாட்கள் வெயில் 100 டிகிரி அளவில் சுட்டெரிக்கிறது. இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே சென்று வருகின்றனர். அனல்காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நாகை பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.