நீராவி முருகனை திண்டுக்கல் போலீசார் நெருங்கியது எப்படி?
ஒட்டன்சத்திரம் டாக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் நீராவி முருகனை திண்டுக்கல் போலீசார் நெருங்கியது குறித்து பரபரப்பு தகவல் வெளியானது.
திண்டுக்கல்:
டாக்டர் தம்பதி வீடு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த டாக்டர் தம்பதி சக்திவேல்-ராணி. கணவன்-மனைவி 2 பேரும் வீட்டின் அருகே மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் சக்திவேலின் பெற்றோரும் வசிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.
சக்திவேலின் தந்தை சென்னியப்பன் வீட்டுக்கு வெளியே வராண்டாவில் தூங்கினார். நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 4 பேர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வராண்டாவில் தூங்கிய சென்னியப்பனை கட்டி போட்டு விட்டு, கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
150 பவுன் நகைகள் கொள்ளை
மேலும் வீட்டுக்குள் தூங்கிய டாக்டர் தம்பதி உள்பட 3 பேரையும் கொள்ளையர்கள் கட்டி போட்டனர். பின்னர் வீட்டில் இருந்த 150 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு, சக்திவேலின் காரில் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். மேலும் அந்த காரை கொடைரோடு அருகே நிறுத்தி விட்டு நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் டாக்டர் சக்திவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் டாக்டர் குடும்பத்தினரை மிரட்டிய போது கொள்ளையர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசியது தெரியவந்தது. இதனால் அவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
அதோடு கொள்ளையர்கள் காரை நிறுத்தி விட்டு சென்ற இடத்துக்கு மோப்பநாய் அழைத்து செல்லப்பட்டது. மோப்பநாய் அங்கிருந்து ஓடி ரெயில் தண்டவாளம் அருகே நின்று விட்டது. இதனால் கொள்ளையர்கள் தண்டவாளம் வழியாக நடந்து சென்று கொடைரோடு அல்லது திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் இருந்து ரெயிலில் ஏறி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
ஒரே பாணியில் 7 சம்பவங்கள்
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 12 தனிப்படைகளை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். மேலும் கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா நியமிக்கப்பட்டார். இவருடைய தலைமையில் 12 தனிப்படையினரும் பல்வேறு ஊர்களுக்கு சென்று விசாரித்து வந்தனர்.
அப்போது ஒட்டன்சத்திரம் பாணியில் தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது. அந்த 6 சம்பவங்களிலும் கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 7 சம்பவங்களிலும் கொள்ளையர்கள் சாதுரியமாக செயல்பட்டது தெரியவந்தது. இதனால் கொள்ளையர்களை பற்றி துப்புதுலக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
நீராவி முருகன்
இதையடுத்து மாநிலம் முழுவதும் நடந்த கொள்ளை வழக்குகள், அதில் தொடர்புடைய நபர்களின் விவரங்களை தனிப்படை போலீசார் விசாரித்து ஆய்வு செய்தனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை அடுத்த நீராவிமேடு பகுதியை சேர்ந்த நீராவி முருகனின் கூட்டாளிகள், ஒட்டன்சத்திரம் பாணியில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
எனவே ஒட்டன்சத்திரம் கொள்ளையில் நீராவிமுருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். எனவே நீராவிமுருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை பிடித்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக பழனி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் கடந்த 3 நாட்களாக நெல்லையில் முகாமிட்டு விசாரித்து வந்தனர்.
அப்போது களக்காடு சுப்பிரமணியபுரத்திற்கு அருகே மலைப்பகுதியில் நீராவி முருகன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு தனிப்படை போலீசார் சென்றபோது, நீராவிமுருகன் போலீசாரை தாக்கியதால் தனிப்படை போலீசார் என்கவுண்ட்டர் மூலம் சுட்டு கொன்று உள்ளனர்.