நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் மனு
நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் மனு
திருப்பூர்:
சாமளாபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பை அகற்றுவதை கைவிட்டு பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் மனு கொடுத்தனர்.
ஆதிதிராவிட மக்கள் குடியிருப்பு
சாமளாபுரம் நில உரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீதுவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சாமளாபுரத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததிய மக்கள் 135 குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இந்தநிலையில் நீர்வள ஆதார அமைப்பு அலுவலகம் மூலமாக இந்த வீடுகளை காலி செய்ய கடந்த 1-ந் தேதி நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஏரிப்புறம்போக்கில் மேடான பகுதியில் வசிக்கிறார்கள். குளத்து தண்ணீரால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வருவாய் ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என்று இருப்பதை வகைமாற்றம் செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.
பரிசீலனை செய்ய வேண்டும்
இந்த பகுதியில் ஆதிதிராவிடர் அல்லாத சமுதாயத்துக்கு 40 ஏக்கர் நிலம் விவசாயம் செய்வதற்கு வகைமாற்றம் செய்து கொடுத்துள்ளார்கள். ஆதிதிராவிட பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சேபனைக்குரிய நிலங்களாக இருந்தாலும் அந்த நிலங்களில் வசிப்பதற்கு உரிமை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலனை செய்து வீடுகளை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.