சோளிங்கரில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் திறக்கப்படாத தாலுகா அலுவலகம்
சோளிங்கரில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் திறக்கப்படாமல் உள்ள தாலுகா அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர்
சோளிங்கரில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் திறக்கப்படாமல் உள்ள தாலுகா அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய தாலுகா
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், விதவை சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்டவைபெற சுமார் 30 கிலோ மீட்டர் சென்று வாலாஜா தாலுகா அலுவலகம் சென்று வந்தனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதை தவிர்க்கும் வகையில் சோளிங்கரை தனி தாலுகாவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்பேரில் கடந்த 31.12.2021 அன்று தமிழக அரசு சோளிங்கரை தனி தாலுகாவாக அறிவித்தது. தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பழைய பேரூராட்சி கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டு அப்போதைய மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் திறக்கப்பட்டது.
திறக்கப்படாத அலுவலகம்
தொடர்ந்து 2020-2021-ம் நிதி ஆண்டில் ரூ.3.7 கோடி மதிப்பில் சோளிங்கர்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் பயணியர் மாளிகை அருகே புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது. புதிய தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் இதுவரை புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது.
தற்போது காந்தி சாலையில் இயங்கி வரும் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் வாகனங்களை நிறுத்த போதிய வசதியில்லாததால் அலுவலக வாசலில் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தாலுகா அலுவலகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.