திருப்பூர்:
முஸ்லிம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டில் வழங்கிய தீர்ப்பை கண்டித்து த.மு.மு.க.வினர் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
நகல் எரிக்கும் போராட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போராட்டம் நேற்று மாலை திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு சி.டி.சி. கார்னரில் நடைபெற்றது.
முஸ்லிம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டில் வழங்கிய தீர்ப்பை கண்டித்து தீர்ப்பு நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
நீதிபதி போன்று உடை
மாவட்ட தலைவர் நசீர்தீன் தலைமை தாங்கினார். செயலாளர் அப்பாஸ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக் கண்டன உரையாற்றினார்.
கோர்ட்டு தீர்ப்பின் நகலை எரித்து கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் நீதிபதி போன்று உடை அணிந்து நூதன முறையில் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் நன்றி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.