கோத்தகிரியில் இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
கோத்தகிரியில் இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டன.
கோத்தகிரி
கோத்தகிரி டானிங்டன் பாரதிநகர் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் கார்த்திகேயன், மகள் கார்த்திகா. இவர்கள் பாரதிநகர் இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு தினந்தோறும் சென்று கல்வி பயின்று வந்தனர்.
அவர்களிடம் இல்லம் தேதி கல்வி திட்ட மேற்பார்வையாளர் நிர்மலா விசாரித்த போது, தனது பெற்றோரால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த 2 மாதமாக பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் ஆனந்தன், ஹாரி உத்தம்சிங், மற்றும் குண்டாடா பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் உடனடியாக மாணவர்களின் பெற்றோரை அணுகி குழந்தைகளின் மனநிலையையும், கல்வியின் அவசியத்தையும் எடுத்து கூறியதுடன், மாணவன் கார்த்திகேயனை கோத்தகிரி சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பிலும், மாணவி கார்த்திகாவை கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பிலும் சேர்த்தனர்.
பள்ளிக்கு செல்லாமல் இருந்த குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்த இல்லம் தேடி கல்வி திட்ட அலுவலர்களை பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.