மசினகுடியில் வன அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க தடை விதித்ததை கண்டித்து வன அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கூடலூர்
வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க தடை விதித்ததை கண்டித்து வன அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனப்பகுதியில் மேய்க்க தடை
நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். பெரும்பாலும் வனத்தின் கரையோரம் உள்ள நிலங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்று வருகிறது. இதன் மூலம் மாவட்டத்திலேயே மசினகுடியில் பால் உற்பத்தி அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் மசினகுடி பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், 2006 வன உரிமை சட்டத்தை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முற்றுகை போராட்டம்
அதன்படி மசினகுடி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கால்நடைகளுடன் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக மசினகுடிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்குள்ள வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து மசினகுடி பஸ் நிலையத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கூடலூர் பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனூப்கான், மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மசினகுடியில் அனைத்து கடைகளும் 1 மணி நேரம் அடைக்கப்பட்டது.
நிறைவேற்ற வேண்டும்
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, மசினகுடியில் பெரும்பாலும் நாட்டு மாடுகள் மட்டுமே வளர்க்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் கால்நடைகள் மேய்க்க தடை விதித்து உள்ளதால் நாட்டு மாடுகளின் இனம் குறைய வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசும் கோர்ட்டும் எங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.