ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிய நடைமுறை போலீசார் தகவல்

ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-03-16 14:41 GMT
ஊட்டி

ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி சிறந்த கோடை வாசஸ் தலமாக விளங்குகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

 இதனை கண்டு ரசிக்கவும், சீசனை அனுபவிக்கவும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வாகனங்களில் வருகை தருவார்கள். 

சீசன் தொடங்கும் முன்பே வார விடுமுறை நாட்களில் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோடை சீசனில் ஊட்டியில் போக்குவரத்து பாதிப்பு வழக்கமான ஒன்றாகி விட்டது.

 ஊட்டி கமர்சியல் சாலை, மணிக்கூண்டு, லோயர் பஜார் உள்ளிட்ட பகுதி களில் வாகனங்களை காலையில் நிறுத்துபவர்கள் இரவு வரை எடுக்காமல் அப்படியே விடுகின்றனர். 

ஆலோசனை கூட்டம் 

சுற்றுலா பயணிகளும் ஆங்காங்கே நிறுத்துவதாலும், வழி தெரியாமல் சுற்றுவதாலும் மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. 

இதை தவிர்க்க வும், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்கவும் ஊட்டி வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, சுற்றுலா நகரமான ஊட்டியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். 

காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் வாகனங்கள் நிற்பதால், பிற வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரங்களில் நிறுத்தாமல் பிற வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும் என்றார்.

புதிய நடைமுறை

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஊட்டி நகரில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஒரு மணி நேரம் மட்டும் நிறுத்த வேண்டும். நீண்ட நேரம் நிறுத்த அனுமதி இல்லை.

 இதனை கடைபிடிக்கும் வகையில் வாகனங்களுக்கு டோக்கன் வழங்கும் புதிய நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்