ஐ.டி.ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.1¼ லட்சம் மோசடி

ஐ.டி.ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.1¼ லட்சம் மோசடி

Update: 2022-03-16 14:33 GMT
ஐ.டி.ஊழியரிடம் ஆன்லைனில் ரூ.1¼ லட்சம் மோசடி
கோவை

கோவையை அடுத்து உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் வாணி. இவர் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கணினி உதிரி பாகங்கள் குறைந்த விலையில் தேவைப்பட்டது. இதையடுத்து அவர் இணையதளத்தில் கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நபர்கள் குறித்து தேடினார். அப்போது ஒரு இணையதளத்தில் குறைந்த விலையில் கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து வாணி அதில் கூறிப்படப்பட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம ஆசாமி சலுகை விலையில் கணினி உதிரி பாகங்கள் தருவதாக தெரிவித்தார். இதையடுத்து தனக்கு உதிரி பாகங்களை விரைந்து அனுப்பி வைக்கும்படி வாணி கேட்டுக்கொண்டார்.

ஆனால் மர்ம ஆசாமி தனக்கு முன்பணமாக பாதி தொகையை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். 
இதனை நம்பிய வாணி அந்த மர்ம ஆசாமி கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலம் முதற்கட்டமாக ரூ.78 ஆயிரத்து 623 அனுப்பினார். பின்னர் அந்த மர்ம ஆசாமியை தொடர்பு கொண்டார். அப்போது அந்த ஆசாமி தனக்கு மீதி தொகையையும் அனுப்பினால் மட்டுமே உதிரி பாகங்களை அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து வாணி 2-ம் கட்டமாக மீதி தொகையை அனுப்பினார். அவர் 2 கட்டங்களாக மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் அந்த மர்ம ஆசாமி கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். 

இதன்பின்னர் வாணி அந்த மர்ம ஆசாமியை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த ஆசாமி செல்போனை எடுக்கவில்லை. அப்போது தான் வாணி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அவர் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்