வெல்டிங் பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை

வெல்டிங் பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை

Update: 2022-03-16 14:28 GMT
வெல்டிங் பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை
கோவை
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 46). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆக வில்லை. இவரும், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (24), கார்த்திக் (32) ஆகியோர் ஒன்றாய் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இதனால் 3 பேரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தியாகராஜன் மது குடித்து விட்டு பாட்டிலில் மீதி மது வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த ரஞ்சித் மற்றும் கார்த்திக் மீதம் உள்ள மதுவை தங்களுக்கு குடிக்க தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு தியாகராஜன் மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திக் மற்றும் ரஞ்சித் அங்கிருந்து சென்று விட்டனர். 

இந்த நிலையில் சம்பவத்தன்று பி.என்.புதூர் மன்றம் அருகே தியாகராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கார்த்திக் மற்றும் ரஞ்சித் வந்தனர். அவர்கள் இருவரும், தியாகராஜனிடம் 3 பேரும் சேர்ந்து மது குடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றனர்.


இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்குள்ள விவேகானந்தா நகரில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத காலி இடத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது தியாகராஜனுக்கும், ரஞ்சித் மற்றும் கார்த்திக் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் உருட்டுக்கட்டையை எடுத்து தியாகராஜனை முகம் மற்றும் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். 

இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.  இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இது குறித்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் விரைந்து சென்று தியாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரஞ்சித், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்