தூத்துக்குடி சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காலாவதியான 10 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்

Update: 2022-03-16 14:09 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காலாவதியான 10 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், காளிமுத்து, ஜோதிபாசு ஆகியோர் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தூத்துக்குடியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில காலாவதியான 10 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் பொட்டலமிடப்பட்டு இருந்த 3.6 கிலோ தோசை மாவும், சேமியாவும் பறிமுதல் செய்யப்பட்டது. காலாவதியான பொருட்களை அழித்திடவும், தவறாக வழிநடத்தும் வகையில் இருந்த தோசை மாவினை உணவு பகுப்பாய்விற்கு அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கவும், காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததற்காக நேரடியாக வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வாங்கும் உணவுப் பொருளின் காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். உணவு பொருள் பொட்டலங்களில் உள்ள லேபிளைப் படித்து, லேபிளில் குறிப்பிட்டுள்ள பொருள்தான் பாக்கெட்டில் உள்ளது என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். வணிகர்கள் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அனைத்து உணவுப் பொருட்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு லேபிள் விவரங்களுடன் மட்டும் தான் விற்க வேண்டும். தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்