தூத்துக்குடியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-16 14:00 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலை உடையார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் அண்டனி சார்லஸ், ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பிரமநாயகம் கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வரும் 2021-22-ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கல்வித்துறை அலுவலர்களின் குளறுபடியால் விதிகளுக்கு புறம்பாக ஒன்றியம் விட்டு ஒன்றியம் கட்டாய பணி நிரவல், கட்டாய பணி மாறுதல், கட்டாய பதவி உயர்வு துறப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேசன், மூட்டா பொதுச் செயலாளர் நாகராஜன், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட பொருளாளர் ஜெயசீலி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்