12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
திருவாரூரில் 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.;
திருவாரூர்:
திருவாரூரில் 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது கலெக்டர் தனது மகன் அர்ஜூனுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில்,
12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 55,400 சிறார்கள் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவர்களது பள்ளிகளிலேயே செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே அனைத்து காலகட்டத்திலும் ஒருவருக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அனைவரும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா சிதம்பரம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேமசந்காந்தி, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---