கிணற்றில் தவறி விழுந்து அரசு பஸ் டிரைவர் பலி
மோட்டார் பழுது பார்த்தபோது, கிணற்றில் தவறி விழுந்து அரசு பஸ் டிரைவர் பலியானார்.
அல்லிநகரம்:
தேனி அன்னஞ்சி ஊஞ்சாம்பட்டியை சேர்ந்தவர் நவநீதன் (வயது 45). இவர், மதுரையில் அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு, ஊஞ்சாம்பட்டி பகுதியில் சொந்த தோட்டம் உள்ளது. நேற்று காலை இவரும், அவருடைய உறவினர் சிவமணியும் தோட்டத்துக்கு சென்றனர்.
தோட்டத்து கிணற்றில் உள்ள மோட்டார் பழுதடைந்து விட்டதால், கிணற்றுக்குள் இறங்கி நவநீதன் பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். சிறிதுநேரத்தில் நவநீதன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தேனி அல்லிநகரம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி நவநீதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது யாகியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.