ரூ.23 லட்சம் கையாடல் செய்ததாக விற்பனை அதிகாரி கைது
விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் மையத்தில் ரூ.23 லட்சம் கையாடல் செய்ததாக விற்பனை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் மையத்தில் ரூ.23 லட்சம் கையாடல் செய்ததாக விற்பனை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சேத்துப்பட்டு பகுதியில் தனியார் நிறுவன விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் விற்பனை மையத்தில் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ராஜி தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது, சென்னை தலைமை நிறுவனத்திலிருந்து சேத்துப்பட்டு விவசாய இடுபொருள் விற்பனை செய்யும் மையத்திற்கு கடந்த சில மாதங்களாக சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான விவசாய இடுபொருட்கள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதும், அதில் ரூ.23 லட்சத்தை விக்னேஷ் கையாடல் செய்திருப்பதும் தனிக்கையில் தெரியவந்தது.
இதுகுறித்து மண்டல மேலாளர் ராஜி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடி செய்ததாக விக்னேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.