காதலித்த 15 நாளில் திருமணம் செய்த ஜோடி போலீசில் தஞ்சம்
காதலித்த 15 நாளில் திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தது. அதேபோல் திருமணமான ஒரே மாதத்தில் கணவன் பிடிக்கவில்லை என்று கூறி 2-வது திருமணம் செய்த பெண்ணும் தஞ்சம் அடைந்தார்.
திருவண்ணாமலை
காதலித்த 15 நாளில் திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தது. அதேபோல் திருமணமான ஒரே மாதத்தில் கணவன் பிடிக்கவில்லை என்று கூறி 2-வது திருமணம் செய்த பெண்ணும் தஞ்சம் அடைந்தார்.
போலீசில் தஞ்சம்
திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் இளம்பெண் ஒருவர் 15 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அப்போது அங்கு பணிபுரியும் வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அந்த பெண் அவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இருதரப்பினரின் குடும்பத்தினரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பெண் கணவருடன் செல்வதாக அடம்பிடித்தார். தொடர்ந்து போலீசார் அவருடன் அனுப்பி வைத்தனர்.
2-வது கணவருடன்
இதேபோல் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த மாதம் உறவினருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கணவரை பிடிக்கவில்லை. இதையடுத்து அவர் வேறு ஒரு வாலிபரை திடீரென திருமணம் செய்து கொண்டார். இது இருவீட்டாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பெண் தனது 2-வது கணவருடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசினர். முடிவில் இருதரப்பினரும் கோர்ட்டுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
2 ஜோடியும் கலப்புத் திருமணம் செய்துள்ளனர். பேச்சுவார்த்தைக்காக இரு ஜோடிகளின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.