தொழிலாளிக்கு கொலைமிரட்டல்: 4 வாலிபர்கள் சிக்கினர்

தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்;

Update: 2022-03-16 11:43 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
போலீசார் ரோந்து
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி 1-வது ரெயில்வே கேட் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். 
4 பேர் கைது
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி துரைசிங் நகரைச் சேர்ந்த சங்கிலிகருப்பன் மகன் விக்கி என்ற விக்னேஷ் என்ற விக்ரம் (வயது 22), தூத்துக்குடி தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்த ஜான் சாமுவேல் மகன்கள் அந்தோணி ராஜ் (23), ஜேசுராஜ் (21) மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் முனீஸ்வரன் (24) என்பது தெரியவந்தது. அவர்கள், அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரிடம் கொலை மிரட்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு வழக்குகள்
கைது செய்யப்பட்ட விக்கி என்பவர் மீது தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உட்பட 3 வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொள்ளை வழக்கும், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் ஆக மொத்தம் 5 வழக்குகளும், மற்றொரு எதிரியான அந்தோணிராஜ் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்