திருச்செந்தூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
திருச்செந்தூர் அருகே மதுகுடிப்பதை மனைவி, மகள் கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே மதுகுடிப்பதை மனைவி, மகள் கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி முந்திரி தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி மற்றும் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சக்திவேலுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்வாராம். அதேபோல் கடந்த 13-ந் தேதி மாலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் மனைவியிடமும், மகளிடமும் தகராறு செய்துள்ளார். இருவரும் அவரை கண்டித்துள்ளனர்.
தீக்குளிப்பு
இதில் ஆத்திரமடைந்த அவர், வீட்டிலிருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை மனைவி மற்றும் மகள் மீது ஊற்றி தீவைக்க முயன்றுள்ளார். அவர்கள் இருவரும் அலறியவாறு வீட்டிலிருந்து வெளியே ஓடிவிட்டனராம். இந்த நிலையில் சக்திவேல் தன் மீது மண்ணைண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாராம். தீ உடல் முழுவதும் பரவி நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு, மனைவி, மகளும் ஓடிவந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்துள்ளனர்.
சாவு
பலத்த தீக்காயங்களுடன் கிடந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று முன்தினம் மாலையில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.