சென்னை நகைக்கடையில் பொதுமக்களின் நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.1.12 கோடி மோசடி - ஊழியர் கைது
சென்னையில் செயல்படும் பிரபல குமரன் ஜூவல்லர்ஸ் நகைக்கடையின் மேலாண்மை இயக்குனர்களில் ஒருவரான ரவீந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை,
எங்கள் நகைக்கடையில் மாதாந்திர தங்க நகை சேமிப்பு சீட்டு திட்டத்தில் பொதுமக்கள் மாதாந்திர தவணையாக ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் செலுத்தி வந்தனர். 11 மாதங்கள் பணம் கட்டி முடிந்தவுடன், பொதுமக்கள் செலுத்திய தொகைக்கேற்ப தங்கநகைகள் சலுகை விலையில் கொடுக்கப்படும்.
இந்த திட்டத்தில் பொதுமக்கள் செலுத்திய பணம் பற்றிய தகவல் கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தது. ஆனால் அதற்கான தொகை உரிய வங்கி கணக்கில் செலுத்தப்படாமல் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், கடை ஊழியர்களான பிரபு, சிவானந்தம், பூபதி, ஸ்டாலின் மற்றும் வேல்முருகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து ரூ.1.12 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. கடை ஊழியர் பிரபு (வயது 31) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். மற்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.