நிழற்குடை அமைக்கப்படுமா?
சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட சகாயநகர் லாயம் விலக்கு மற்றும் விசுவாசபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியில் உள்ள பண்டாரபுரம் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. தினமும் ஏராளமான பெண்கள், மாணவ-மாணவிகள், முதியவர்கள் பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிகளில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.தர்மராஜன், அனந்தபத்மனாபபுரம்.
குடிநீர் குழாய் தேவை
கோட்டாரில் இருந்து பறக்கை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஓடையின் அருகில் மாநகராட்சி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. இதையடுத்து அதன் அருகில் சிறுமின்விசை தொட்டி மூலம் வினியோகம் செய்யப்படும் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், சேதமடைந்த குடிநீர் குழாய் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.சிவபிரகாஷ், இசங்கன்விளை.
பொதுமக்கள் அவதி
நாகர்கோவில் மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட மேலராமன்புதூர்-தளவாய்புரம் சாலை உள்ளது. இந்த சாலை சீரமைப்பு பணிக்காக கடந்த 1 மாதமாக ஜல்லிகள் கொட்டப்பட்ட நிலையிலேயே கிடக்கிறது. இதனால், வாகனங்கள் போகும்போது ஜல்லியின் துகள்கள் காற்றில் பறப்பதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுவதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ஆர். ராஜன், மேலராமன்புதூர்.
மரத்தை அகற்ற வேண்டும்
திருவட்டார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொல்வேல் பகுதியில் இருந்து பாரதப்பள்ளி செல்லும் சாலையில் சானல்கரையோரம் ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரின் அருகில் பழமையான மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் டிரான்ஸ்பார்மரின் மீது முறிந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விபின்ஜோஸ், கொல்வேல்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் அலெக்சந்திரா பிரஸ் ரோட்டில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையின் மேல் மூடி சேதமடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஓடையின் மூடி சேதமடைந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்து காணப்படும் மூடியை அகற்றி விட்டு புதிய மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தமிழ்ச்செல்வி, ஆரல்வாய்மொழி.
சுகாதார சீர்கேடு
ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் வைகை குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் சிலர் குப்பைகளை கொட்டி உள்ளனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தின் கரைகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
-நாகராஜன், ஆரல்வாய்மொழி.